ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் இரண்டு இந்திய LPG கப்பல்கள் பயணம்; சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலக அளவில் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளன. புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 'Jag Vasant' மற்றும் 'Pine Gas' ஆகிய இரண்டு பிரம்மாண்ட எல்பிஜி ஏற்றிச் செல்லும் கப்பல்கள், ஐக்கிய அரபு அமீரகக் கரையில் இருந்து ஈரான் கடற்கரை வழியாக வடக்கு நோக்கிப் பயணித்து வருகின்றன. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கான கப்பல்கள் இந்தப் பாதையில் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளால் இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரானியப் படைகள் அனுமதி அளித்து வருகின்றன.
முன்னெச்சரிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, இந்த கப்பல்கள் தங்களது இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர்களில் தாங்கள் செல்லும் இடத்தைக் குறிப்பிடாமல், "இந்தியாவிற்குச் சொந்தமான கப்பல்" என்ற அடையாளத்தை மட்டும் வெளிப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே 'ஷிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரு கப்பல்கள் கடந்த வாரம் குஜராத் துறைமுகங்களை வந்தடைந்தன. அவை கொண்டு வந்த 92,712 டன் எரிவாயு, இந்தியாவின் ஒரு நாள் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது. இதற்கிடையில், சீனாவிற்கு செல்ல வேண்டிய ரஷ்ய எண்ணெய் கப்பல், நடுவழியில் தனது திசையை மாற்றி மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலக நாடுகளே திணறி வரும் வேளையில், இந்தியா வெற்றிகரமாக தனது கப்பல்களை கொண்டு வருவது ராஜதந்திர வெற்றி.