"இந்திய தயாரிப்பாளர்கள் தரமான உதிரிபாகங்களை தயாரிக்க வேண்டும்"- அமைச்சர் பியுஷ் கோயல்!
ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலெக்ட்ரிக் வாகனங்களே. அதற்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் இந்திய எலெக்ட்ரிக் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள், தரமான பொருட்களைத் தயாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல். இந்தியாவில் ஆட்டோமொபைல் உதிரிபாகக் கண்காட்சி கடந்த ஜனவரியில் டெல்லியின் பிரகதி மைதானில் நடைபெற்றது. அப்போது சில உதிரிபாக தயாரிப்பாளர்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கான உதிரிபாகங்களை உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்குவதை விட ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவே விரும்புகின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தன. தரமான பொருட்களை தயாரிக்கும், மேலும் அதற்கான தொழில்நுட்பங்கள் இருக்கும் நாடுகளிடம் இருந்து உதிரிபாகங்களை வாங்குவது எளிதாக இருப்பதாக எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் வாதிடுகின்றன.
உலக நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும்:
வெளிநாட்டு இறக்குமதியை தடை செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனத் தெரிவித்திருக்கிறார் பியுஷ் கோயல். அதே நேரம், இந்திய எலெக்ட்ரிக் வாகன உதிரிபாக தயாரிப்பாளர்கள் குறைவான விலையில், தரமான உதிரிபாகங்களைத் தயாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியாளர்களே தரமான உதிரிபாகங்களை வழங்கும் பட்சத்தில் எந்த நிறுவனமும் இறக்குமதி செய்ய எண்ண மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார் அவர். மேலும், அவர் பேசும் போது, "இந்திய ஆட்டோமோட்டிவ் உதிரிபாக தயாப்பாளர்களின் கூட்டமைப்புடன் தொடர்ந்து நான் உரையாடி வருகிறேன். உலகத் தரத்திலான உதிரபாகங்களைத் தங்களால் தயாரிக்க முடியும் என அவர்கள் உறுதியோடு இருக்கிறார்கள். தரம் மற்றும் விலை ஆகிய இரண்டிலும் தங்களால் உலக நிறுவனங்களுடன் போட்டியிடமுடியும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.