வெனிசுலா செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அவசர எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்துள்ள சூழலில், இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் அவசரப் பயண ஆலோசனையை (Travel Advisory) வழங்கியுள்ளது. அதன்படி, வெனிசுலாவில் நிலவும் போர் போன்ற அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்கள் வெனிசுலாவிற்கு மேற்கொன்ளும் அனைத்து அவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு பலமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே வெனிசுலாவில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களின் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உதவி
தூதரக தொடர்பு உதவி எண்கள்
வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் தலைநகர் கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக cons.caracas@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், +58-412-9584288 என்ற எண்ணில் அழைப்பு மூலமாகவோ, வாட்ஸ்அப்பிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோர் நள்ளிரவில் அமெரிக்கப் படைகளால் பிடிக்கப்பட்டு நியூயார்க்கிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் சதி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிர்வாகம்
வெனிசுலா நிர்வாகம்
வெனிசுலாவில் ஒரு பாதுகாப்பான மற்றும் சரியான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை, அமெரிக்காவே அந்நாட்டைத் தற்காலிகமாக நிர்வகிக்கும் என்றும், அங்குள்ள எண்ணெய் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மதுரோ ஆதரவாளர்கள் கராகஸ் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்நாட்டு அரசு ஊடகங்கள் தொடர்ந்து மதுரோவிற்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. வெனிசுலாவின் ராணுவ நிலைகள் பலவற்றைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கா கூறினாலும், அந்நாட்டில் மிகப்பெரிய உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனாலேயே இந்திய அரசு தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.