Loading...
அரபிக்கடலில் பதற்றம்: இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல்
இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல்

அரபிக்கடலில் பதற்றம்: இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
01:42 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் நாட்டின் கடற்படை கப்பல் அதிவேகமாக வந்து மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்முறைக்கு மாறான செயலை கண்டித்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. செப்டம்பர் 15 மாலை, வட அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்பு பணியில் இந்தியப் போர்க்கப்பல் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் கப்பல் மோதியபோதிலும், இந்திய போர்க்கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்தம் மீறல்

1991 இருதரப்பு ஒப்பந்தம் மீறல்

பாகிஸ்தான் கப்பலின் இந்த நடவடிக்கை 1991-ஆம் ஆண்டின் இருதரப்பு ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை (Article 10) முற்றிலும் மீறும் வகையில் அமைந்திருப்பதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

1991 இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, சர்வதேச கடலில் இயங்கும் இரு நாட்டுப் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் விபத்துகளை தவிர்க்க குறைந்தபட்சம் 3 நட்டிக்கல் மைல் (சுமார் 5.6 கி.மீ) இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

இந்த விதியை மீறி பாகிஸ்தான் கப்பல் ஆபத்தான முறையில் மிக அருகில் வந்ததே மோதலுக்கு காரணம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா எச்சரிக்கை

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்கனவே பதற்றம் நிலவிவரும் சூழலில், இந்த கடற்படை மோதல் மேலும் பரபரப்பைக்கூட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரிடம் தனது கண்டனத்தை பதிவு செய்த இந்திய அரசு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆபத்தான மோதல்கள் நிகழாத வண்ணம் இருநாட்டு ஒப்பந்தங்களை பாகிஸ்தான் ராணுவம் சரியாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படை இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயல்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த 2011ஆம் ஆண்டு ஏடன் வளைகுடா பகுதியில் சர்வதேசக் கடலில் அதிவேகமாகச் சென்ற பாகிஸ்தானின் PNS பாபர், இந்தியாவின் INS கோதாவரி மீது உரசிச் சென்றது.

இதில் இந்தியக் கப்பலின் ஹெலிகாப்டர் தள வலை சேதமடைந்தது.

ADVERTISEMENT