இந்தியா-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்துக்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையானது இனி வாரத்திற்கு ஒருநாள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. எதிர்பார்த்ததை விட குறைவான முன்பதிவுகள் காரணமாக வாரத்தில் மூன்று நாட்களாக குறைக்கப்பட்ட இந்த சேவை, 21 செப்டம்பர் 2024 முதல் கூடுதலாக சனிக்கிழமைகளிலும் இயக்கப்படும். இதன் மூலம் வாரம் இனி நான்கு நாட்கள் இந்த சேவை கிடைக்க உள்ளது. முன்னதாக, சிவகங்கை என்ற பெயருடன் கடந்த 16 ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடங்கிய படகு சேவை ஆரம்பத்தில் தினமும் இயக்கப்பட்டது. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கும்படி மாற்றப்பட்டது.
செப்டம்பர் 21 முதல் கூடுதல் சேவை
செப்டம்பர் 21 முதல், கூடுதலாக சனிக்கிழமையும் இந்த கப்பல் சேவை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sailindsri.com, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் உள்ள 'Sail IndSri' செயலி அல்லது பதிவுசெய்யப்பட்ட பயண முகவர்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு சிறந்த சேவையை வழங்கும் IndSriஇன் முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் வாராந்திர சேவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை இடையே முன்னதாக இயக்கப்பட்டு வந்த கப்பல் சேவை இலங்கை உள்நாட்டு இனக்கலவரத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.