தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தமிழக்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் அந்த கப்பலை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்நிலையில், இந்த தொடக்க விழாவில் வீடியோ கால் மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா-இலங்கை இடையேயான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என்று கூறினார். "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் தொடங்குகிறோம். நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகுச் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்." என்று பிரதமர் மோடி தனது உரையின் போது கூறினார்.
சுப்பிரமணிய பாரதியின் பாடலைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவைகள் இணைப்பையும் வர்த்தகத்தையும் மேம்படுத்தும் என்று மோடி மேலும் வலியுறுத்தினார். கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் சிந்து நதியின் மிசை பாடலைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "பெரும் கவிஞர் சுப்பிரமணிய பாரதி, தனது சிந்து நதியின் மிசை பாடலில், நமது இரு நாடுகளையும்(இந்தியாவையும் இலங்கையையும்) இணைக்கும் பாலம் பற்றிப் பேசியிருந்தார். இந்த படகு சேவை அந்த வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது." என்று தெரிவித்தார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் போக்குவரத்திற்கான சோதனை ஓட்டம் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கியது. இந்த கப்பல் புறப்படும் நேரம், பயணக் கட்டணம் போன்ற விவரங்களை இங்கே காணலாம்.