நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு வரும் 10 ஆம் தேதி தொடங்க உள்ள கப்பல் போக்குவரத்திற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. கேப்டன் பிஜு பி ஜார்ஜ் தலைமையில் 14 வீரர்கள் மட்டும் கப்பலில் பயணம் செய்கின்றனர். மூன்று மணி நேரத்தில் இலங்கையின் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு சென்றடையும் இந்த கப்பல் மீண்டும் இன்று மாலை புறப்பட்டு நாகை வருகிறது. இந்த சோதனை ஓட்டம் நாளையும் நடத்தப்படுகிறது. அதன்பின் நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. இலங்கை செல்ல ஒரு நபருக்கு கட்டணமாக ₹6,500 மற்றும் மற்றும் 18% ஜிஎஸ்டி வரிவுடன் சேர்த்து மொத்தமாக ₹7,670 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கப்பலின் பயண நேரங்கள்
நாகை துறைமுகத்திலிருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் கப்பல் மதியம் 12 மணிக்கு கங்கேசன்துறை துறைமுகத்தை அடையும். மீண்டும் அங்கு மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு நாகை திரும்பும். ஒருவர் 50 கிலோ வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இலங்கைக்கு படகில் செல்ல விசா மட்டும் பாஸ்போர்ட் கட்டாயம். நாகை துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் முன்பதிவு செய்துவிட்டு இலங்கை பயணிக்க காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.