ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்தியா.. முன்னேறும் இந்திய நிறுவனங்கள்!
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உலகம் முழுவதும் ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதி 1.5% குறைந்திருக்கிறது. ஆனால், இந்தியா மட்டும் 121% அதிக ஏற்றுமதியைப் பதிவுசெய்திருக்கிறது. உலகம் முழுவதும் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச்சிற்கான தேவை அதிகரித்ததும், அதனை பையர் போல்ட், நாய்ஸ் மற்றும் போட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் பூர்த்தி செய்ததுமே இந்தியாவின் ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதி அதிகரித்ததற்குக் காரணம் என தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது கவுண்டர்பாய்ன்ட். முதல் காலாண்டில் உலகமும் முழுவதும் ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதி மற்றும் விற்பனை குறித்த களஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது கவுண்டர்பாயன்ட் நிறுவனம். வழக்கம் போல் இந்த முறையும் அதிக அளவு ஏற்றுமதியுடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஆப்பிள். எனினும், அதன் சந்தைப் பங்கு 26% ஆகக் குறைந்திருக்கிறது.
ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் முன்னேறும் இந்திய நிறுவனங்கள்:
குறைந்தவிலை ஸ்மார்ட்வாட்ச்களுக்கான தேவை அதிகரித்ததையடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த சாம்சங்கை பின்தள்ளி 9% சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது இந்தியாவின் ஃபையர் போல்ட் நிறுவனம். கடந்த காலாண்டை விட 57% வளர்ச்சியும், கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிக ஏற்றுமதியையும் செய்திருக்கிறது ஃபையர் போல்ட். மேலும், ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 27% ஏற்றுமதியுடன் வடஅமெரிக்காவை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. இந்திய ஏற்றுமதியில் 2,000 ரூபாய்க்குள்ளான ஸ்மார்ட்வாட்ச்களே 40% பங்கைப் பிடித்திருப்பதாகவும் கவுண்டர்பாய்ன்ட் நிறுவனம் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. சமீபத்தில் ஆப்பிள் வெளியிட்ட சீரிஸ் 8 ஆப்பிள் வாட்ச்சானது பயனர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதையடுத்து 32% இருந்து 26% ஆகக் குறைந்திருக்கிறது ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதி.