
யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் ஏழு இந்திய இயற்கை தளங்கள் சேர்ப்பு; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்திற்கு கூடுதல் பெருமையாக, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் ஏழு புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, எதிர்கால சந்ததியினருக்காக இந்தியாவின் தனித்துவமான புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில், இந்தியாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்த புதிய சேர்த்தல்களுடன், நாட்டின் தற்காலிகப் பட்டியலில் இப்போது மொத்தம் 69 இடங்கள் உள்ளன. அவற்றில், 17 இயற்கை இடங்கள் ஆகும். புதிதாகப் பரிந்துரைக்கப்பட்ட தளங்கள், இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் பரவியுள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளன.
பட்டியல்
பட்டியலில் இடம் பெற்றுள்ள இடங்கள்
எரிமலைக் கட்டமைப்புகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் மகாராஷ்டிராவில் உள்ள டெக்கான் ட்ராப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அறுகோண பசால்டிக் பாறைகளுக்குப் புகழ் பெற்ற கர்நாடகாவின் செயின்ட் மேரி தீவுக்கூட்டம், மேகாலயாவில் உள்ள மேகலாயன் ஏஜ் குகைகள், நாகாலாந்தில் உள்ள அரிய நாகா ஹில் ஓபியோலைட் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனித்துவமான சிவப்பு மணல் மேடுகளான எர்ரா மட்டி டிபாலு ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலை மலைகள் மற்றும் கேரளாவின் கடலோரப் பாறைகளான வர்கலா ஆகியவை அவற்றின் பல்லுயிர்த் தன்மை மற்றும் தனித்துவமான புவியியல் அமைப்புகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
முதல் படி
உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான முதல் படி
ஒரு தளம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முன், தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்படுவது ஒரு கட்டாய முதல் படியாகும். இந்தச் சமர்ப்பிப்புகளைத் தயாரித்ததில், இந்தியத் தொல்லியல் துறைக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பாரம்பரிய இடங்களின் இந்த விரிவாக்கம், கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு இரண்டிலும் செழுமையான நாடாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.