இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்
லடாக்கின் மேற்கு இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலைமை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மார் 18) தெரிவித்துள்ளார். மேலும், சில பகுதிகளில் இராணுவப் படைகள் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், இன்னும் ஆபத்தான நிலை தான் நிலவி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எஸ்.ஜெய்சங்கர் கூறிய கருத்து
அதன் பிறகு, இராஜதந்திரம் மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகளின் மூலம் நிலைமை சீராக்கப்பட்டது. கடந்த டிசம்பரில், வரையறுக்கப்படாத எல்லையின் கிழக்குப் பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது, ஆனால் இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. "என் மனதை பொறுத்தவரை, அங்கு நிலைமை இன்னும் பலவீனமாகத் தான் இருக்கிறது. ஏனென்றால், சில இடங்களில் ராணுவ படைகள் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ மதிப்பீட்டின் படி இது மிகவும் ஆபத்தானது தான்" என்று இந்தியா டுடே மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.