இரயில்வே மற்றும் துறைமுக கட்டுமான திட்டங்களில் கையெழுத்திடவிருக்கும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா?
இன்றும் நாளையும் (செப்டம்பர் 9 மற்றும் 10) இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கெடுக்க பல்வேறு நாட்டுப் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் இன்று இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்த ஜி20 மாநாட்டில், இரயில்வே மற்றும் துறைமுகக் கட்டுமான திட்டங்களில் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் ஃபைனர் இது குறித்து பேசும் போது, "இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையிலான இரயில்வே மற்றும் துறைமுகக் கட்டுமானத் திட்டங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
எதற்காக இந்தத் திட்டம்?
மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கிடையில் வணிகம், ஆற்றல் மற்றும் தகவல் பரிமாற்றம் தடையின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் எனவும், ஜான் ஃபைனர் தெரிவித்துள்ளார். மேற்கூறிய நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் அமெரிக்கா மிகுந்த ஈடுபாடு காட்டுகிறது. மேலும், சவுதி அரேபியாவுடன் சமீப காலங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருவதன் விளைவாக இந்தத் திட்டம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட எவ்வளவு காலமாகும் எனத் தெரியாது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார் ஃபைனர்.