இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவின் சொத்து மதிப்பு ₹1,400 கோடி; ஏழை எம்எல்ஏவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பை அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் எனும் அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, மிகப்பெரிய பணக்கார எம்எல்ஏவின் சொத்து மதிப்பு ₹1,400 கோடிக்கு மேல் உள்ள நிலையில், ₹2,000 கூட சொத்து மதிப்பு இல்லாத ஏழை எம்எல்ஏவும் உள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடகாவின் துணை முதல்வராகப் பதவியேற்ற டி.கே.சிவகுமாரின் சொத்து மதிப்பு ₹1,413 கோடி உள்ளது. இவர் தான் தற்போது இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவாக உள்ளார். பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள கேஎச் புட்டஸ்வாமி கவுடா (₹1,267 கோடி), மூன்றாவது இடத்தில் உள்ள பிரியா கிருஷ்ணாவும் (ரூ.1,156 கோடி) கூட கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
₹1,700 மட்டுமே சொத்துமதிப்பு கொண்ட பாஜக எம்எல்ஏ
ஒருபுறம் அதிக சொத்துக்களை கொண்ட பணக்கார எம்எல்ஏக்கள் இருந்தாலும், மறுமுனையில் குறைந்தபட்ச சொத்துக்களை கொண்ட ஏழைகளும் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஏழை எம்எல்ஏக்களை பொறுத்தவரை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான நிர்மல் குமார் தாரா வெறும் ₹1,700 மட்டுமே சொத்தாக கொண்டு பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஒடிசாவைச் சேர்ந்த மகரந்தா முதுலி ₹15,000 மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த நரிந்தர் பால் சிங் சவுனா ₹18,370 சொத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதற்கிடையே நாட்டின் முதல் 20 பணக்கார எம்எல்ஏக்களில் 12 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.