அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70% உயரும்
ஃபிட்ச் குழுமத்தின் ஒரு பிரிவான பிஎம்ஐயின் அறிக்கை படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70%க்கும் அதிகமாக வளரும் என்று கணித்துள்ளது. இது நீர்மின்சாரம் அல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கான முக்கியத்துவத்தை கூட்டுகிறது. நிலக்கரி தொடர்ந்து மின்சார உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி கணிசமான மாற்றம் ஏற்படும் என்று அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. "அடுத்த தசாப்தத்தில் இந்தியாவின் மின்சார உற்பத்தி 70% அதிகரிக்கும் என்று நாங்கள் கணித்துள்ளோம்" என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
2032 வரை மின்சாரத் தேவை ஆண்டுதோறும் 4.9% உயரும்
"புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் இந்தியா வலுவான கவனம் செலுத்தும், இது 2032 க்குள் மொத்த உற்பத்தியில் 16.9% ஆக இருக்கும்" என்று அறிக்கை மேலும் கூறியது.மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைகள் போன்ற தொழில்களால் அதிகரிக்கும் தேவைகள் போன்ற காரணங்களால் இந்தியாவின் மின்சாரத் தேவை சீராக வளர்ந்து வருகிறது. இந்த தேவை 2032 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4.9% அதிகரிக்கும் என்று BMI அறிக்கை குறிப்பிடுகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2023 நிதியாண்டில் இந்தியாவின் ஆற்றல் தேவைகள் 15,11,847 மில்லியன் யூனிட்களை எட்டியது.