இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு
திங்களன்று (செப்டம்பர் 23) இந்தியாவில் குரங்கம்மை கிளேட் 1 மாறுபாட்டின் முதல் பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் எம்பாக்ஸை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க வழிவகுத்தது இதே மாறுபாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபருக்கு கிளேட் 1 பி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நோயாளி தற்போது நிலையாக உள்ளார் மற்றும் கண்காணிப்பில் உள்ளார். சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மனிஷா வர்மா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்தியாவில் குரங்கம்மை பாதிப்புகள்
இந்த மாத தொடக்கத்தில் ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் 26 வயதுடையவருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2 மாறுபாடு எம்பாக்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் 2022ஆம் ஆண்டு எம்பாக்ஸை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்ததிலிருந்து, இந்தியாவில் 30 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்பாக்ஸ் கிளேட் 1பி என்பது ஒரு வகை குரங்கம்மை வைரஸாகும். இது தற்போது மத்திய ஆப்பிரிக்காவில் பரவி கடுமையான நோயை உண்டாக்கி வருகிறது. இந்த மாறுபாடு வேகமாக பரவுகிறது. அதனால்தான் ஆப்பிரிக்க நாடுகளில் நூற்றுக்கணக்கான நோய்த்தொற்றுகளுக்குப் பிறகு இது உலக பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக எம்பாக்ஸ் தொற்றுக்கு ஆப்பிரிக்காவில் 800 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.