இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தன்று தொடக்கம்!
செய்தி முன்னோட்டம்
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை வரும் 2027 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 81-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2027 ஆகஸ்ட் 15 அன்று புல்லட் ரயில் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த ரயில் மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ஆகிய இரு முக்கிய நகரங்களை இணைக்கும். புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ முதல் 350 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இதன் மூலம் மும்பை - அகமதாபாத் இடையேயான பயண நேரம் தற்போதைய 6-8 மணி நேரத்திலிருந்து வெறும் 2 முதல் 3 மணி நேரமாக குறையும்.
அம்சங்கள்
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
ஜப்பானின் 'ஷின்கான்சென்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சூரத், வடோதரா மற்றும் வாபி உள்ளிட்ட 12 முக்கிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. குஜராத் பகுதியில் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும், கடலுக்கு அடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் மகாராஷ்டிராவில் தொடங்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டது, ஆரம்ப காலக்கெடு டிசம்பர் 2023 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற செயல்படுத்தல் சிக்கல்களுடன் தொடர்புடைய தாமதங்கள் காலக்கெடுவை திருத்த வழிவகுத்தன. இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, இரு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் போக்குவரத்து கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.