இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ
குஜராத், அகமதாபாத் சபர்மதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம். இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமிக்க வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் நிலையம் அதிநவீன கட்டுமான கலை அம்சங்களையும் கொண்டுள்ளது. அதேபோல் இந்தியாவின் பழைய மற்றும் புதிய கட்டுமான வகையினை இணைத்து இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. பயணிகளின் வசதிக்கேற்ப இந்த சபர்மதி புல்லட் ரயில் நிலையம் அமைந்துள்ள நிலையில், இந்த ரயில் பாதையானது இருவழி மார்க்கமாக அகமதாபாத்-மும்பை செல்லும் வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 508 கி.மீ.,தொலைவினை சுமார் 2.07 மணிநேரத்தில் கடக்க முடியும் என்று கூறப்படுகிறது. மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் இந்த புல்லட் ரயில்கள் செல்லும் தண்டவாளங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் 2026ல் முடிவடையும்
இத்திட்டத்தின் மதிப்பு ரூ.1.08 லட்சம் கோடி, இதில் 81%அடுத்த 50 ஆண்டுகளில் 0.1% வட்டி விகிதத்தில் செலுத்தும் வகையில் ஜப்பான் நாட்டிடமிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் ரூ.10,000 கோடியும், குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகள் ரூ.5,000 கோடியும் வழங்குவதாக கூறியுள்ளது. 2017ம்.,ஆண்டில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது, பின்னர் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதற்கான பணிகள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிகிறது. மேலும் இதற்கான முதற்கட்ட பணிகள் 2026ல் முடிவடையும் என்றும், பணிகள் முழுவதும் 2028ல் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் புல்லட் ரயில் நிலையத்தின் வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.