74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசிய கொடியேற்றினார்
இந்திய நாட்டின் குடியரசு தினம் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நமது நாட்டிற்கு விடுதலை கிடைத்தது. அதனை தொடர்ந்து, நமது தேசத்திற்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது. நமது நாடு முழுமையான குடியரசு நாடாக உருவெடுத்த நாளான ஜனவரி 26ம்தேதியை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். அதன்படி, 74ம்ஆண்டு குடியரசு தினமான இன்று சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமை பாதையில் (ராஜ பாதை) நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் தேசிய கொடியினையேற்றி வைத்தார். அவர் தேசிய கொடி ஏற்றுகையில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.
பிரதமர் முன்னிலையில் குடியரசு தின விழா அணிவகுப்புகள்
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வர். அதன்படி பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியையேற்றிய பிறகு அணி வகுப்புகள் காலை 10.30 மணியளவில் துவங்கியதாக கூறப்படுகிறது. கடமை பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே துவங்கிய அணிவகுப்பு, விஜய் சவுக், இந்தியாகேட், செங்கோட்டைவரை செல்லும் என்பது குறிப்பிடவேண்டியவை. இதனைதொடர்ந்து, சென்னை மெரினாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகொடியினை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவைகளோடு இந்தாண்டு பெண்காவலர்களின் முரசு இசை நிகழ்ச்சி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.