இந்தியாவில் ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா: 9 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-3) 3,641ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 3,038ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,038 புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து வருகிறது. இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,29,284) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நாட்டின் செயலில் உள்ள கொரோனா 21,179 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.05 சதவீதமாகும். சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, டெல்லி மற்றும் பஞ்சாபில் தலா 2 உயிரிழப்புகளும், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட்டில் தலா 1 உயிரிழப்பும், கேரளாவில் 2 உயிரிழப்புகளும் நேற்று பதிவாகி இருக்கிறது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,901 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,77,204 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 6.12 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.45 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.76 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,64,740 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 220,66,11,814 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,799 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், தற்போது ஏற்படும் கொரோனா பாதிப்புகளில் 25-30% XBB மாறுபாட்டின் பிற துணைப் பிரிவுகளால் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.