இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்
இந்தியாவின் பல பகுதிகளிலும் திரையரங்குகளை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் தங்களது மல்டிபிளக்ஸ் திரையரங்கை துவங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்கின் திறப்பு விழா நேற்று(பிப்.,1) நடந்துள்ளது. இதன் பின்னர் பிவிஆர் லிமிடெட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான அஜய் பிஜிலி கூறுகையில், எங்களின் 14வது வளாகத்தினை தமிழகத்தில் திறக்கப்படுவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். காலம் மாற மாற பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகளவில் தேவைப்படுகிறது என்று கூறினார். விமான பயணிகள் தங்களது ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள தங்கள் திரையரங்க வளாகம் உதவும் என்றும், பயணிகளுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
5 அரங்குகள் கொண்ட 1,155 பார்வையாளர்கள் அமரும் வகையில் திரையரங்குகள் வடிவமைப்பு
மொத்தம் 5 அரங்குகள் கொண்ட இந்த வளாகம் விமான பயணிகளின் பொழுதுபோக்கிற்காகவும், விமான நிலையத்தின் அருகில் இருப்போருக்கு வசதியாகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரங்கில் 1,155 பார்வையாளர்கள் அமரும் வகையில் திரையரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரையரங்குகளில் 2K RGB+ லேசர் ப்ரொஜெக்டர்கள், அல்ட்ரா-பிரைட் படங்களுக்கான Real ID 3D டிஜிட்டல் ஸ்டீரியோஸ்கோபிக் ப்ரொஜெக்க்ஷன் மற்றும் மேம்பட்ட டால்பி அட்மாஸ் இம்மர் ஹை-டெபினிஷன் உள்ளிட்ட அதிநவீன சினிமா தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலேயே முதன்முறையாக அதுவும் சென்னை விமான நிலையத்தில் திரையரங்கு திறக்கப்பட்டிருப்பது விமான பயணிகளுக்கும், சென்னை சினிமா ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.