மக்கள்தொகை எண்ணிக்கை: சீனாவை முந்தியதா இந்தியா
இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்திருந்தாலும், கிட்டத்தட்ட 2050ஆம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று உலக மக்கள்தொகை மதிப்பாய்வு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2022ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள்தொகை 1.417 பில்லியனாக இருந்தது. இது சீனாவின் மக்கள் தொகையை விட 5 மில்லியன் அதிகமாகும். சீன மக்கள்தொகை வீழ்ச்சி அடைந்திருப்பதால் இந்த ஏற்றம் தெரிகிறது. மேக்ரோட்ரெண்ட்ஸ் என்ற ஆராய்ச்சி தளத்தின் மற்றொரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 1.428 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் எண்ணிக்கை சீனாவின் மக்கள் தொகை எண்ணிக்கையை விட இன்னும் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.
எந்தெந்த நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும்?
மறுபுறம், தேசிய புள்ளியியல் பணியகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, சீனாவின் மக்கள்தொகை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 2022 இல் 850,000 குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அதன் மதிப்பீட்டில், 2022 முதல் 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகை வெகுவாக அதிகரிக்கும் என்று கூறி இருக்கிறது. இந்த அதிகரிப்பு வெறும் எட்டு நாடுகளில் மட்டுமே காணப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. குறிப்பிடப்பட்ட அந்த 8 நாடுகளின் பெயர்கள்: காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா. ஆனால், சீனா தற்போது அதன் மக்கள்தொகையை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. அதிக பிறப்புகளை ஊக்குவிக்கம் வகையில் வரி விலக்குகள், நீண்ட மகப்பேறு விடுப்பு மற்றும் வீட்டு மானியங்களை வழங்க தொடங்கியுள்ளது.