
தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; போர் நிறுத்தத்திற்குப் பின் இந்தியா உறுதி
செய்தி முன்னோட்டம்
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன.
அதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை மீண்டும் வலியுறுத்திய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
"பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இதை தொடர்ந்து மேற்கொள்ளும்." என்று ஜெய்சங்கர் கூறினார்.
போர் நிறுத்தம் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஆபரேஷன் சிந்தூர்
பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்த ஆபரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம் செயல்படுத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே உச்சகட்ட பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்த நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, இதில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த உயர்மட்ட பயங்கரவாதிகளும் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தினாலும், இந்தியா வலுவான பதிலடி கொடுத்ததில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு மற்றும் விமான தளங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இந்திய ராணுவத்தின் DGMOவிற்கு அழைத்து பேசியதன் மூலம், தற்போது தாக்குதல் நிறுத்தபப்ட்டுள்ளது.