இந்தியா வழங்கிய விமான உதவியை மறுத்துவிட்டார் கனேடிய பிரதமர்
36 மணி நேரத்திற்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது குழுவும் இறுதியாக கனடாவுக்கு புறப்பட்டனர். கனேடிய பிரதமரின் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ட்ரூடோவும் அவரது குழுவினரும் இந்தியாவில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு IAF One விமானத்தின் சேவையை வழங்க இந்தியா முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியாவின் உதவியை நிராகரித்த கனேடிய குழு, கனடாவில் இருந்து மாற்று விமானம் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தது. ஜஸ்டின் ட்ரூடோவையும் அவரது தூதுக்குழுவையும் அழைத்துச் செல்வதற்காக ராயல் கனடிய விமானப்படை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு CFB ட்ரெண்டனிலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்டது.
திடீரென்று லண்டனுக்கு திருப்பிவிடப்பட்ட மாற்று விமானம்
ஆனால், கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த மாற்று விமானம் திடீரென்று லண்டனுக்கு திருப்பிவிடப்பட்டதால், மேலும் பரபரப்பு அதிகரித்தது. கடந்த திங்கட்கிழமை இரவு டெல்லிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த மாற்று விமானம் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது. இது ட்ரூடோவின் பயணத்தை மேலும் தாமதப்படுத்தியது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில், அவரது ஏர்பஸ் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டன. அதனால், நேற்று பிற்பகல் அவர் கனடாவுக்கு புறப்பட்டார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ட்ரூடோவைக வழி அனுப்பி வைக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். ஏற்கனவே, காலிஸ்தான் தீவிரவாத பிரச்சனையால் கனடா மற்றும் இந்தியாவின் உறவுகளில் பதட்டமான நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில், கனடா பிரதமர் இந்தியாவில் சிக்கி தவித்தது அந்த பதட்டத்தை மேலும் அதிகரித்திருந்தது.