பாஸ்போர்ட் வாங்குவோருக்கு புதிய விதிகள்! உயர்த்தப்பட்ட கட்டணங்கள் & குழந்தைகளுக்கான முக்கிய மாற்றங்கள்; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட் (திருத்தப்பட்ட) விதிகள் 2026-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் செல்லுபடியாகும் கால வரம்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய திருத்தங்கள் செப்டம்பர் 15 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதேபோல, பாஸ்போர்ட் சேவைகளுக்கான திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஜூலை 1 முதல் கணக்கிடப்படுகின்றன.
15 வயதிற்கு உட்பட்டவர்கள்
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம்
புதிய விதிகளின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட், வழங்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது அந்த குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை (எது முன்னதாக வருகிறதோ அதுவரை) மட்டுமே செல்லுபடியாகும்.
எடுத்துக்காட்டாக, 14 வயதில் பாஸ்போர்ட் பெறும் ஒரு குழந்தைக்கு, 5 ஆண்டுகள் நிறைவடையாவிட்டாலும் 18 வயது பூர்த்தியாகும் போதே அந்த பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவுக்கு வந்துவிடும்.
பழமை வாய்ந்த 1980 ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் விதிகளில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய கட்டணங்கள்
பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள்
புதிய கட்டண அமைப்பின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான 36 பக்க சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ₹2,500 ஆகவும், 60 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ₹3,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தட்கல் சேவையில் 36 பக்கங்களுக்கு ₹5,000 மற்றும் 60 பக்கங்களுக்கு ₹6,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 36 பக்க சாதாரண பாஸ்போர்ட்டிற்கு ₹1,750-மும், தட்கல் சேவைக்கு ₹4,250-மும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
பிற கட்டணம்
பாஸ்போர்ட் தொலைதல், தள்ளுபடி மற்றும் பிற சான்றிதழ்கள் கட்டணம்
தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டை மாற்றியமைக்க பெரியவர்களுக்கு சாதாரண சேவையில் ₹5,000-மும் (தட்கல் ₹7,500), சிறுவர்களுக்கு ₹4,250-மும் (தட்கல் ₹6,750) கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், 8 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது 10% கட்டணத் தள்ளுபடி தொடரும்.
மேலும் காவல்துறை சான்றிதழ் போன்ற பிற சேவைகளுக்கான கட்டணம் ₹750 ஆக மாற்றப்பட்டுள்ளது.