உலகின் 2வது நாடு இந்தியா! பக்கவாதம் ஏற்பட்டால் வீடு தேடி வரும் மருத்துவமனை! ஐசிஎம்ஆர் சாதனை!
செய்தி முன்னோட்டம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்கும் வகையில், மொபைல் ஸ்ட்ரோக் யூனிட்களை (MSU) அவசரகால மருத்துவச் சேவைகளுடன் இணைத்த உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஜெர்மனிக்கு அடுத்தபடியாக, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இத்தகைய மேம்பட்ட சேவையை வெற்றிகரமாகச் செயல்படுத்திய நாடு இந்தியா மட்டுமேயாகும்.
விளக்கம்
மொபைல் ஸ்ட்ரோக் யூனிட் என்றால் என்ன?
இது ஒரு நடமாடும் அதிநவீன மருத்துவமனை ஆகும். இதில் பின்வரும் வசதிகள் உள்ளன: சிடி ஸ்கேனர்: ஆம்புலன்ஸிற்குள்ளேயே நோயாளியின் மூளையைப் பரிசோதிக்க முடியும். டெலி-கன்சல்டேஷன்: வீடியோ கால் மூலம் மூளை நரம்பியல் நிபுணர்களுடன் ஆலோசித்து சிகிச்சையைத் தொடங்கலாம். பரிசோதனைக் கூடம்: இரத்தப் பரிசோதனை மற்றும் தேவையான மருந்துகளை உடனுக்குடன் வழங்க வசதி உள்ளது. தடுப்பு மருந்துகள்: மூளையில் இரத்த உறைவைத் தடுக்கும் உயிர் காக்கும் மருந்துகள் ஆம்புலன்ஸிலேயே வழங்கப்படும்.
அசாம்
அசாமில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்
வடகிழக்கு இந்தியாவின் கடினமான நிலப்பரப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் முதன்முதலில் அசாமில் சோதிக்கப்பட்டது. இதற்கான முடிவுகள் வியக்கத்தக்க வகையில் உள்ளன: நேரம் குறைப்பு: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நேரம் 24 மணிநேரத்திலிருந்து வெறும் 2 மணிநேரமாகக் குறைந்துள்ளது. உயிரிழப்பு குறைவு: பக்கவாதத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மூன்றில் ஒரு பங்கு (1/3) குறைந்துள்ளது. முடக்கம் தவிர்ப்பு: பக்கவாதத்தால் ஏற்படும் உடல் முடக்கம் 8 மடங்கு குறைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் வெற்றியால், அசாம் அரசுக்கு இந்த வாகனங்களை ஐசிஎம்ஆர் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது.
சிகிச்சை
கோல்டன் ஹவர் சிகிச்சை
பக்கவாதம் ஏற்படும் போது ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஒரு நிமிட தாமதத்தில் சுமார் 19 லட்சம் மூளைச் செல்கள் அழியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிப்பது அவசியமாகும். மொபைல் ஸ்ட்ரோக் யூனிட்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் கூட இனி உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையைப் பெற முடியும். இது இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகும்.