
ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது இந்தியா; மியான்மர் நிலநடுக்கத்தில் மீட்பு பணிகளுக்கு உதவிக்கரம்
செய்தி முன்னோட்டம்
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று பரவலான அழிவை ஏற்படுத்திய நிலையில், மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையின் கீழ், 15 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் சனிக்கிழமை (மார்ச் 29) அதிகாலை 3 மணிக்கு ஹிண்டன் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு காலை 8 மணிக்கு யாங்கோனை அடைந்தது.
மியான்மருக்கான இந்திய தூதர் யாங்கோன் முதலமைச்சரிடம் உதவியை ஒப்படைத்ததாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள், உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மீட்பு நாய்களை ஏற்றிச் செல்லும் கூடுதல் விமானங்கள் அனுப்பப்பட்டன.
பெயர்
ஆபரேஷனுக்கான பெயர்க் காரணம்
பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு, மியான்மரை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், படைப்பின் கடவுளின் பெயரால் இந்த நடவடிக்கைக்கு பிரம்மா என்று பெயரிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் விளக்கினர்.
மேலும் இந்தியா வழங்கும் நிவாரண உதவியில் ஆக்ராவிலிருந்து 118 பேர் கொண்ட கள மருத்துவமனை குழுவும் அடங்கும், இந்த குழுவும் இன்றே கிளம்புகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, கான்கிரீட் கட்டர்கள், துளையிடும் இயந்திரங்கள் மற்றும் பிளாஸ்மா கட்டர்கள் உள்ளிட்ட மேம்பட்ட நிலநடுக்க மீட்பு கருவிகளைக் கொண்ட பணியாளர்களையும் இந்தியா பணியில் அமர்த்தியுள்ளது.
ஆபரேஷன் பிரம்மா மூலம், இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மருக்கு உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகால ஆதரவை வழங்குவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.