
உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு
செய்தி முன்னோட்டம்
உலகளவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 75 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 192 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் இது கடந்த 1995ம் ஆண்டு முதல் காசநோயால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்ததை விட அதிக எண்ணிக்கை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022ல் புவியியல் ரீதியாக காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்கிழக்கு ஆசியா(46%), ஆப்ரிக்கா(23%), மேற்கு பசிபிக் பிராந்தியம்(18%) உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளது.
பாதிப்பு குறைவான பகுதிகளாக அமெரிக்கா(3.1%), ஐரோப்பா(2.2%), கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி(8.1%) உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
காசநோய்
'புரிதல் இல்லாததால் இந்நோய் நமது முன்னோர்கள் காலகட்டத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது' - உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்
மேலும், புதிதான பாதிப்புகளின் எண்ணிக்கையினை குறைக்கும் நாடுகளுள் 2020-2021ம் ஆண்டுகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகள் முன்னிலை வகிக்கிறது.
உலகளவில் காசநோய் பாதிப்புகளை குறைக்கும் விகிதத்தில் இந்நாடுகள் 60%பங்கினை பெற்றுள்ளது.
இதனிடையே, இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறுகையில், 'காசநோய் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான புரிதல் நமது முன்னோர்களுக்கு இல்லாத காரணத்தினால் அவர்கள் உயிரிழப்புகளை சந்தித்தனர்' என்றும்,
'ஆனால் தற்போது இந்நோய் பாதிப்பினை கண்டறிய தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. அதனால் இந்நோய்கான இறுதி அத்தியாயத்தினை எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது' என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு எச்.ஐ.வி.நோய்தொற்று உள்பட காசநோய் பாதிப்புடைய மரணங்கள் உலகளவில் 1.4 கோடியாக இருந்த நிலையில், 2022ல் 13 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடவேண்டியவை.