இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு
இந்திய காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இருந்ததை விட 200 புலிகள் அதிகரித்துள்ளன என்று அரசாங்கம் கணக்கிட்டுள்ளது. இது மகிழ்ச்சிகரமான செய்தி என்றாலும், பல பெரிய மாநிலங்களில் புலிகளின் இருப்பிட எண்ணிக்கை குறைந்து வருவது கவலையை எழுப்பியுள்ளது. சமீபத்திய மதிப்பீட்டில் மொத்தம் 3,080 புலிகளின்(1 வயதுக்கு மேற்பட்டவை) படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகளின் புகைப்படங்களை ஒப்பிடும் போது, தற்போது உள்ள புலிகள் பெரிதாக இருக்கின்றன. "புலிகளை காக்கும் 13 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், இந்தியா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது." என்று அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் 5வது வெளியீட்டை வெளியிட்ட பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 824 புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது
பகுப்பாய்விற்காக 174 தளங்களில் 32,588 இடங்களில் கேமரா வைக்கப்பட்டு புலிகளின் படங்கள் எடுக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தி 47 மில்லியனுக்கும் அதிகமான கேமரா படங்கள் பிரிக்கப்பட்டன. அந்த செயற்கை நுண்ணறிவு 3,080 புலிகளை அடையாளம் கண்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், பெரிய பூனைகளின் ஆக்கிரமிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது அதிருப்தியான ஒரு செய்தியாகும். இந்தியாவின் 1,161 புலிகள் தற்போது மத்திய இந்தியாவிலும், 824 மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், 804 சிவாலிக் மலைத்தொடரிலும், 194 வடகிழக்கு மாநிலங்களிலும், 100 சுந்தரவனப் பகுதிகளிலும் உள்ளன. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் போன்ற வடமேற்கு மாநிலங்களில் இருக்கும் அதிக புலிகள், காப்பகங்களுக்கு வெளியே உள்ளன. எனவே அதிகாரிகள் புலிகளின் வாழ்விடப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.