மாலத்தீவை புறக்கணிக்கும் இந்தியர்கள்: மாலத்தீவு சுற்றுலா தரவரிசையில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா
கடந்த மூன்று வாரங்களாக மாலத்தீவு சுற்றுலாப் பயணிகளின் புள்ளிவிவரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவு-இந்தியாவுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை முதலிடத்தில் இருந்து 5வது இடத்திற்கு சரிவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, இரு நாட்டுக்கும் இடையேயான உறவுகள் சிதைந்தன. பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார். இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் சில மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசி இருந்தனர்.
மாலத்தீவை புறக்கணிக்கும் இந்தியர்கள்
இதனால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இணையவாசிகள் பலர் மாலத்தீவு அதிகாரிகளின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு "மாலத்தீவை புறக்கணிக்க" அழைப்பு விடுத்தனர். பல இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கான முன்பதிவுகளை ரத்து செய்தனர். இதனால், மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நாட்டவர்களின் எண்ணிகையில் ரஷ்யா முதலிடத்திலும், இத்தாலி 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் உள்ளன. 2023 ஆம் ஆண்டில், இந்தியா முதலிடத்திலும், ரஷ்யா 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு அரசாங்கத் தரவுகளின்படி, தற்போதைய புள்ளிவிவரங்கள்
முதலிடம்: ரஷ்யா- 18,561 சுற்றுலா பயணிகள் (10.6%) 2வது இடம்: இத்தாலி- 18,111 சுற்றுலா பயணிகள் (10.4%) 3வது இடம்: சீனா- 16,529 சுற்றுலா பயணிகள் (9.5%) 4வது இடம்: இங்கிலாந்து- 14,588 சுற்றுலா பயணிகள் (8.4%) 5வது இடம்: இந்தியா- 13,989 சுற்றுலா பயணிகள் (8.0%) 6வது இடம்: ஜெர்மனி- 10,652 சுற்றுலா பயணிகள் (6.1%) 7வது இடம்: அமெரிக்கா- 6,299 சுற்றுலா பயணிகள் (3.6%) 8வது இடம்: பிரான்ஸ்- 6,168 சுற்றுலா பயணிகள் (3.5%) 9வது இடம்: போலந்து- 5,109 சுற்றுலா பயணிகள் (2.9%) 10 வது இடம்: சுவிட்சர்லாந்து- 3,330 சுற்றுலா பயணிகள் (1.9%)