இந்தியா vs சீனா: LAC அருகே ரோந்து செல்ல உடன்பாடு எட்டப்பட்டது
செய்தி முன்னோட்டம்
ஒரு பெரிய திருப்புமுனையாக, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக்கோட்டில் (LAC) ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க இந்தியாவும், சீனாவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளதாக திங்களன்று மத்திய அரசு கூறியது.
இது எல்லைக்கோடு அருகே அதிகரித்து வந்த பதற்றநிலைக்கு பின்னர் ஏற்படும் ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
சீனா சமீபகாலமாக எல்லைக்கோடு அருகே ராணுவதளவாடங்களை குவித்து வந்ததும், புதிய கட்டுமானங்களை தொடங்கி ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வந்ததும் நினைவிருக்கலாம்.
16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி இன்று ரஷ்யா செல்லவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கடுமையான மோதலில் இருந்து LAC அருகே நிலைமை பதட்டமாக இருந்தது.
சந்திப்பு
சீன அதிபரை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்
"கடந்த பல வாரங்களாக நடந்த விவாதங்களின் விளைவாக, இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ரோந்து ஏற்பாடுகள் குறித்து ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது துண்டிப்பு மற்றும் இறுதியில் 2020 ஆம் ஆண்டில் இந்தப் பகுதிகளில் எழுந்த பிரச்சினைகளுக்கு தீர்வு" என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு சந்திப்பு குறித்து கேட்டபோது, அந்த அதிகாரி, "சமீபத்திய வாரங்களாக, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே இராஜதந்திர மற்றும் ராணுவ விவாதங்கள் நடந்து வருகின்றன. அதற்கான நேரத்தையும் விவரங்களையும் நாங்கள் இன்னும் ஒருங்கிணைத்து வருகிறோம்." என்றார்.