LOADING...
முடிவுக்கு வருகிறதா மோதல்? இந்தியா -கனடா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்தியா -கனடா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

முடிவுக்கு வருகிறதா மோதல்? இந்தியா -கனடா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2026
07:13 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 2023-ம் ஆண்டு முதல் நீடித்து வந்த தூதரக மோதல்களை கடந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகள் தங்களது உறவை சீரமைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. ஒட்டாவாவில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் கனடா பாதுகாப்பு ஆலோசகர் நத்தலி ட்ரூயின் ஆகியோர் எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க 'கூட்டுச் செயல் திட்டத்தை' வகுத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் காலத்தில் இந்தியா - கனடா உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்தது. ஆனால், தற்போது கனடாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளும் உறவை மேம்படுத்தத் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

முடிவுகள்

இரு நாடுகளுக்கிடேயே ஒத்துழைப்பிற்கான முக்கிய முடிவுகள்

இரு நாடுகளின் சட்ட அமலாக்கத் துறைகளுக்கு இடையே உடனடித் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஏதுவாக, சிறப்புத் தொடர்பு அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான குற்றப் பின்னணி கொண்ட கும்பல்கள் மற்றும் 'பெண்டானில்' (Fentanyl) போன்ற போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இணையவழிப் பாதுகாப்பு (Cybersecurity) மற்றும் குடியேற்ற சட்டங்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான முறையான கட்டமைப்பு உருவாக்கப்படும்.

பின்னணி

இந்தியா- கனடா உறவு

2023-ல் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றின. இருப்பினும், தற்போது மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள சூழலில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ரீதியான உறவுகள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இந்த முக்கியமான நகர்வு, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் விரிசலை சரிசெய்து, வர்த்தகம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement