"இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்!
Universal Acceptance-ல் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா செயல்பட வேண்டும் என ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பின் இடைக்கால சிஇஓ சாலி காஸ்டெர்டன் தெரிவித்துள்ளார். உலகளவில் அனைத்து மக்களுக்கும் இணையதளம் ஒரேமாதிரியானதாக இருக்க வேண்டும் எனவும், உலகின் அனைத்து மக்களும் இணையத்தைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும் உருவாக்கப்பட்ட அமைப்பே ICANN. தற்போது உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இணையத்துடன் உரையாட ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள். Domain Name-கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலே தான் இருக்கும். அப்படி இல்லாமல், அனைத்து மக்களும் தங்களுடைய தாய் மொழியில் அல்லது தங்களுக்கு விருப்பமான மொழியில் இணையத்தைப் பயன்படுத்துவதை, அதற்கேற்ற வகையில் இணையத்தை மாற்றியமைக்க முனைகிறது இந்த அமைப்பு.
முன்னோடியாக இந்தியா:
இந்தியாவில் டிஜிட்டலாக்கம் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. நிறைய மக்கள் இணையத்தோடு இணைந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார் சால் காஸ்டெர்டன். டொமைன் பெயர்களிலும் லத்தீன் எழுத்துப்படிவம் அல்லாத பிற எழுத்துப்படிவ மொழிகளைப் பயன்படுத்த IDN (Internationalised Domain Names) சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது ICANN. இதன் மூலம் ஆங்கிலம் மட்டுமல்லாது சீன, அரபிக், தேவனாகரி உள்ளிட்ட எழுத்துப்படிவ மொழிகளிலும் டொமைன் பெயரை பயன்படுத்த ICANN வழிவகை செய்கிறது. தற்போது '.in' என்ற டொமைன் பெயர் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக இதனை ஆங்கிலத்தில் இல்லாமல் ஹிந்தியில் உருவாக்க வேண்டும் என ICAAN அமைப்பின் குழுத்தலைவர் த்ரிப்தி சின்ஹா தெரிவித்துள்ளார். இது போன்ற மாற்றங்களை முன்னெடுக்க இந்தியா சிறப்பான களமாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.