
இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் எக்ஸ் கணக்கை முடக்கியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக, "இந்தியாவை சிதைக்க வேண்டும்" என்று வெளிப்படையாகப் பதிவிட்ட ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் குந்தர் ஃபெஹ்லிங்கர்-ஜான் என்பவரின் எக்ஸ் சமூக வலைதள கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது. காலிஸ்தான் வரைபடத்துடன் அவர் வெளியிட்ட இந்த சர்ச்சை கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பதிவில், "நான் இந்தியாவை சிதைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். நரேந்திர மோடி ரஷ்யாவின் ஆள். காலிஸ்தானுக்கு சுதந்திர நண்பர்கள் தேவை" என்று ஃபெஹ்லிங்கர்-ஜான் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இந்த பதிவு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
முடக்கம்
கணக்கு முடக்கம்
மத்திய அரசு இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு இந்த எக்ஸ் கணக்கிற்கான அணுகலை நிறுத்துமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அதன்பிறகு, அவரது கணக்கு இந்தியாவில் செயலிழக்கப்பட்டுள்ளது. ஃபெஹ்லிங்கர்-ஜான், உக்ரைன், கொசோவோ, போஸ்னியா மற்றும் ஆஸ்திரியாவின் நேட்டோ உறுப்புரிமைக்கான ஆஸ்திரிய குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார். ஆனால், அவர் ஆஸ்திரிய அரசாங்கத்தில் எந்த அதிகாரப்பூர்வ பதவியிலும் இல்லை. இது குறித்து ஆஸ்திரிய அரசிடம் இந்தியா முறையிடுமா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், "ஏன் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அவர் ஒரு பைத்தியக்காரர். அவருக்கு அதிகாரப்பூர்வ பதவி எதுவும் இல்லை" என்று பதிலளித்துள்ளார்.