டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்
'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கு, டிசம்பர் 6ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க, 28 கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில், நான்கு சட்டமன்றங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது மற்றும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.