LOADING...
டெல்லியில் இன்று கூடுகிறது இந்தியா கூட்டணி! காங்கிரஸ் 'துரோகம்' என திமுக புறக்கணிப்பு
டெல்லியில் இன்று கூடுகிறது இந்தியா கூட்டணி

டெல்லியில் இன்று கூடுகிறது இந்தியா கூட்டணி! காங்கிரஸ் 'துரோகம்' என திமுக புறக்கணிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 08, 2026
09:36 am

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்ற மற்றும் அண்மையில் நடந்து முடிந்த மாநில சட்டமன்ற தேர்தல் பின்னடைவுகளுக்கு பிறகு, தங்களின் எதிர்கால அரசியல் உத்திகளை வகுப்பதற்காக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' (INDIA) கூட்டணியின் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கள்கிழமை (ஜூன் 8) புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறுகிறது. கடந்த 2024 ஜூன் மாதத்திற்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 23 அரசியல் கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழக கட்சியான திமுக (DMK) இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி

காங்கிரஸ் 'துரோகம்' செய்துவிட்டது: திமுக கூட்டத்தைப் புறக்கணிப்பதன் பின்னணி

இந்தியா கூட்டணியின் அஸ்திவாரமாக விளங்கிய திமுக, இன்றைய கூட்டத்தில் பங்கேற்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நகர்வுகளே இதற்குக் காரணமாகும் அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இணைந்து காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முடிவெடுத்தது. பல தசாப்த கால தங்களின் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் எடுத்த இந்த முடிவை திமுக கடுமையாக எதிர்க்கிறது. காங்கிரஸ் கட்சி தங்களுக்குத் துரோகமும், முதுகில் குத்தும் வேலையையும் செய்துவிட்டதாக திமுக தொண்டர்களும் தலைவர்களும் கொதிப்படைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற மக்களவையிலும் திமுக எம்பிக்களுக்குத் தனி இருக்கை வசதி செய்து தருமாறு அக்கட்சியின் எம்பி கனிமொழி சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அம்சங்கள்

இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள்

அண்மையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் திமுக சந்தித்த தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது என்பதால், கூட்டணியை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2029-ல் வரவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை பாஜாக-வின் NDA கூட்டணிக்கு எதிராக எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுவது மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

Advertisement