நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து கலவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை
இந்தியாவில் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி எதிர்ப்பு மருந்து கலவையைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. உலகளவில் குறைந்தது 141 குழந்தைகள் சளி மற்றும் இருமல் மருந்துகள் வழங்கப்பட்டதால் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்படாத சளி-எதிர்ப்பு மருந்து கலவைகளை வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கவலைகள் ஒரு விவாதத்தைத் தூண்டியதாகவும், அதன் விளைவாக அந்த வயதினருக்கு குறைவாக உள்ள குழந்தைகள் இக்கலவையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், தற்போது வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்துகளால், காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகள் உட்பட உலகளவில் 141 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
தடை செய்யப்பட்டுள்ள மருந்து கலவைகள் எவை?
இந்தியாவைப் பொறுத்த வரையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இவ்வகை மருந்துகளால், குறைந்தது 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த விலையில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதால், இந்தியா பெரும்பாலும் "உலகின் மருந்தகம்" என்று அழைக்கப்படுகிறது. கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையான-மருந்து கலவை (FDC) மீதான கட்டுப்பாட்டாளரின் உத்தரவு, புதன்கிழமை பத்திரிகையாளர்களுக்கு வெளியிடப்பட்டது. மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை "4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் FDC பயன்படுத்தக்கூடாது" என்ற எச்சரிக்கையுடன் மருந்துகளை விற்பனை செய்யவும் அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது. நிலையான மருந்து கலவையில் குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபைனிலெஃப்ரின் ஆகியவை அடங்கும். இது சாதாரண சளி அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க சிரப்கள் அல்லது மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகிறது.