ட்விட்டர் பதிவுகளை நீக்க கோரும் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா!
பயனர்களின் பதிவுகளை நீக்கக் கோரும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியா இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ட்விட்டர். இது குறித்து அதன் வலைப்பூவில் ட்விட்டர் பதிவிட்டிருக்கிறது. அதில் கடந்த 2022-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவர் 1 முதல் ஜூன் 30 வரை) மட்டும், பயனர்கள் 53,000 பதிவுகளை நீக்க அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருக்கிறது இந்தியா. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளே பயனர்களின் பதிவுகளை நீக்க கோரிக்கை விடுக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
பயனர் கணக்குகளின் மீது நடவடிக்கை:
மேலும், உலகம் முழுவதும் 85 நாடுகளில் இருந்து, பயனர்களின் தகவல்களைக் கேட்டு 16,000 கோரிக்கைள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்பதிவில் ட்விட்டர் குறிப்பிட்டிருக்கிறது. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் 5,096,272 ட்விட்டர் கணக்குகளின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களை விட 20% அதிகமாகும். வெறுப்பு பேச்சு, போலியான தகவல் பகிர்தல், தற்கொலை எண்ணத்தை தூண்டுதல், தீவிரவாதம், வன்முறை மற்றும் திருடப்பட்ட தகவல் ஆகிய காரணங்களுக்காக மேற்கூறிய கணக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
இந்த காலவரிசையைப் பகிரவும்