செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உறவினர்கள் நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டில்களுக்கு உரிய வரியினை செலுத்தாமல் மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. மேலும், மதுபாட்டில்களின் விலையும் கூடுதலாக விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய தொடர்புடையோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை ஈடுபாடு
கடந்த 26ம் தேதி துவங்கிய இந்த சோதனை 4வது நாளாக இன்றும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் செந்தில் கார்த்திகேயன் இல்லம் மற்றும் அலுவலகம், காந்தி கிராமம் இபி காலனியிலுள்ள சோபனா-பிரேம்குமார் ஆகியோர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனையானது நடக்கிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு கருதி ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதற்கிடையே கரூர்-சேலம் இடையே உள்ள நெடுஞ்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் பிரம்மாண்டமாக ஓர் வீட்டினை கட்டி வருகிறார். அந்த வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.