புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை
புதுச்சேரி அண்ணாசாலை செட்டிவீதி பகுதியில் பை ஒன்று வெகுநேரமாக கேட்பாரற்று சாலையோரம் கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் டீ கடை வைத்துள்ள பெரியசாமி(45) என்பவர் அருகில் ஆட்டோ ட்ரைவர் ஒருவரையும் அழைத்து கொண்டு அந்த பையின் அருகில் சென்று எடுத்து பார்த்துள்ளார். அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரியக்கடை காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பையுடன் டீ கடை உரிமையாளரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த பையில் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் வைத்து எண்ணிப்பார்த்துள்ளனர். அப்போது அதில் 49 லட்சம் இருந்த நிலையில், அதனை உயரதிகாரிகள் அறிவுறுத்தல்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றுள்ளனர்.
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்
ஆனால் ஆட்சியர் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தியதால், பணம் அங்கு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஆட்சியர் மணிகண்டன், பணத்திற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நீதிமன்றம் மூலம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளார்கள். அதன்படி அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது, இருசக்கரத்தில் அந்தப்பக்கம் செல்லும் ஒருவரது பை அவரது பாக்கவாட்டில் இருந்து கீழேவிழுவது பதிவாகியுள்ளது. இதற்கிடையில் வெங்கட்ட நகரை சேர்ந்த சங்கர் போர்வால் தனது பணத்தினை வங்கியில் செலுத்த சென்றபொழுது தவற விட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளார். அவரை அந்த பணம் குறித்த ஆவணங்களை வரும் திங்கட்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.