மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி
காங்கிரஸுக்கு இன்னுமொரு பின்னடைவாக, பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான், தனது மாநிலத்தில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க போவதில்லை என அறிவித்துள்ளார். காங்கிரஸும், ஆம் ஆத்மியும் எதிர்கட்சி கூட்டணியாக இந்திய அணியில் பிரதான கூட்டணிக் கட்சிகள் ஆகும். பகவந்த் மானின் இந்த அறிவிப்பு, மேற்கு வங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜி , வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் தனது மாநிலத்தில், தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கூறிய சில மணிநேரங்களிலேயே வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், புஞ்சம் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் தனது கட்சி வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனித்து போட்டியிட ஒப்புதல் அளித்த கெஜ்ரிவால்
பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவின் முடிவிற்கு, கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாபில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி மறுத்ததாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி பிடிவாதமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். முன்னதாக இன்று, லோக்சபா தேர்தலில் ஆளும் பிஜேபிக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜியும் அறிவித்தார். காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு பேச்சுக்கள் தோல்வியடைந்ததை மேற்கோள் காட்டி, தனித்து போட்டியிட முடிவெடுத்ததாக மம்தா கூறியுள்ளார்.