Page Loader
நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!
சைபர் குற்றங்களைத் தடுக்க மத்திய அரசின் புதிய நடவடிக்கை

நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!

எழுதியவர் Prasanna Venkatesh
May 25, 2023
10:39 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள பல்வேறு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் தங்களுடைய மொபைல் எண் பயன்பாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறையிடம் புகாரளித்து வருகின்றனர். நாட்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்க குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் மொபைல் எண்களை தடைசெய்யக்கூறி கடந்த ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ள DGP மற்றும் கமிஷனர்களுக்கும் உத்தவிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் மொபைல் எண்களானது பெரும்பாலான நேரங்களில் போலியான ஆவணங்கள் மற்றும் போலியான தகவல்களைக் கொடுத்தே வாங்கப்படுகின்றன. எனவே, போலியான ஆவணங்கள் மற்றும் தகவல்களைக் கொண்ட மொபைல் எண்களையும் துண்டிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை செயல்படுத்தும் போது தான், சாதாரண பயனர்களின் மொபைல் எண்களுக்கும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்தே பலரும் புகாரெழுப்பி வருகின்றனர்.

சைபர் கிரைம்

குற்றச்சம்பவங்களைத் தடுக்க புதிய திட்டம்:

மக்கள் தங்களுடைய ஆவணங்களை பல இடங்களிலும் சரிபார்ப்புக்காக கொடுக்கின்றனர். அப்படி ஏதோ ஒரு சில இடங்களில் பெறப்படும் ஆவணங்களை மொபைல் எண்களை வாங்க குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, குற்றச்செயலில் ஈடுபடும் எண் குறித்த தகவல்களை விசாரிக்கும் போது அதனுடன் தொடர்புடைய நிஜ உரிமையாளரின் எண்களும் கண்டறியப்பட்டு அவற்றுடன் சேர்த்து தடை செய்யப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் தங்களுடைய ஆவணங்களை உரிய நிறுவனங்களிடம் கொடுத்து மொபைல் எண்ணை மீண்டும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத் தொடர்புத்துறையின் தரவுப்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 12,34,111 எண்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து ஹரியானாவில் 5 லட்சம். பீகாரில் 3 லட்சம் எண்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 3,491 எண்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறது.