Loading...
சென்னையில் விடிய விடிய மழை; தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது

சென்னையில் விடிய விடிய மழை; தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
07:47 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக மற்றும் கேரளப் பகுதிகளின் மேல் நிலவி வருவதால், தமிழகத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நிலவும் தீவிர வானிலை காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இவற்றுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பகுதியில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாள்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நகரின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.

புயல்

புதிய புயல் சின்னம் உருவாக்கம்

இதனிடையே, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு காற்றுச்சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக். 25-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT