ஐஐடி மெட்ராஸின் புதிய பிஎஸ் படிப்பு! வயது வரம்பு இல்லை, நுழைவுத் தேர்வு அவசியமில்லை; உடனே விண்ணப்பிங்க?
செய்தி முன்னோட்டம்
சென்னை ஐஐடி, மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக பிஎஸ் இன் மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற புதிய இளங்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வணிக உலகில் தரவு பகுப்பாய்வு மற்றும் நிர்வாகத் திறன் ஆகிய இரண்டும் மிக முக்கிய தேவைகளாக உள்ள நிலையில், இந்த இரண்டு துறைகளையும் இணைத்து இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகுதி
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார்?
இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க எந்தவிதமான வயது வரம்பும் கிடையாது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எவரும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11-ஆம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். அவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு படிப்பில் சேரலாம். விண்ணப்பதாரர்கள் 10 அல்லது 12-ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். அலுவலக வேலைக்குச் செல்பவர்கள் கற்கும் வகையில், இது ஹைபிரிட் முறையில் நடத்தப்படும். வகுப்புகள் ஆன்லைனிலும், தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும்.
முக்கிய தேதிகள்
முக்கியமான தேதிகள் மற்றும் விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: பிப்ரவரி 21, 2026. விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மே 31, 2026. வகுப்புகள் தொடக்கம்: ஜூன் 2026. விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ₹1,500 (எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை உண்டு).
சேர்க்கை முறை
சேர்க்கை முறை மற்றும் வேலைவாய்ப்புகள்
இந்த படிப்பில் சேர ஜேஇஇ தேர்வு கட்டாயமில்லை. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 4 வார கால ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும். அதன் முடிவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேரடியாக படிப்பில் சேரலாம். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள் நேரடியாக சேரவும் வாய்ப்பு உண்டு. இந்த பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு ஆலோசனை, நிதி, மென்பொருள், சுகாதாரம் மற்றும் பொதுக் கொள்கை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பாடங்களின் எண்ணிக்கையைத் தேர்வு செய்யலாம். ஓராண்டு முடிவில் சான்றிதழ் அல்லது இரண்டாண்டு முடிவில் டிப்ளோமா பெற்றுக்கொண்டு வெளியேறும் வசதியும் இதில் உள்ளது. விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம் https://study.iitm.ac.in/mg/ ஆகும்.