Loading...
ஐஐடி கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்; கைது செய்யாமல் ஐஐடி செய்த காரியம்
இணையதளத்தை ஹேக் செய்த மாணவனுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வாய்ப்பு வழங்கும் ஐஐடி நிர்வாகம்

ஐஐடி கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்; கைது செய்யாமல் ஐஐடி செய்த காரியம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 30, 2026
03:31 pm

செய்தி முன்னோட்டம்

ஐஐடி கான்பூரில் பி.டெக் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவில் சேர்க்கை கிடைக்காத விரக்தியில், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக் செய்த மாணவனுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்காமல், அவருக்கு தனது மையத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வாய்ப்பு வழங்க ஐஐடி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. பி.டெக் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், சேர்க்கை கிடைக்காத அந்த மாணவன் IIT-K இணையதளத்தை செயலிழக்க செய்து,"Site is Hacked, All I Need Is Just a Fair Chance" என்ற செய்தியை பதிவிட்டுள்ளார். ஹேக்கிங் குறித்த ஸ்கிரீன்ஷாட்களை எக்ஸ் மற்றும் ரெடிட்டில் பகிர்ந்த அந்த மாணவன், "எனக்கு அமைப்பின் பாதுகாப்பைச் சேதப்படுத்தும் எண்ணம் இல்லை; எனது திறமையை நிரூபிக்கவே இதைச் செய்தேன்" எனத் தெரிவித்திருந்தார்.

எதிர்வினை

காவல் புகார் அளிக்காதது ஏன்? ஐஐடி கான்பூர் இயக்குநர் விளக்கம்

பொதுவாக இதுபோன்ற சைபர் தாக்குதல்களுக்கு FIR பதிவு செய்யப்படும் என்ற போதிலும், மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஐஐடி நிர்வாகம் வேறுவிதமான முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் மணீந்திர அகர்வால் தெரிவிக்கையில், "ஹேக்கிங் போன்ற சட்டவிரோத செயல்கள் மூலம் வாய்ப்புகளைத் தேடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இருப்பினும், அந்த மாணவனின் எதிர்காலத்தைப் பாழாக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, எங்கள் C3iHub சைபர் செக்யூரிட்டி மையத்தில் அவருக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கி, அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு முயற்சி செய்ய அறிவுறுத்தப் பரிசீலித்து வருகிறோம். அதேவேளையில், இதுபோன்ற முறையற்ற வழிகளைப் பிற மாணவர்கள் பின்பற்றக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்," என்று கூறினார்.

அழைப்பு

தகுதியுள்ள நபர்களுக்கு அழைப்பு

சைபர் செக்யூரிட்டி துறையில் திறமையுள்ள மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பை (CV) அனுப்பி C3iHub மையத்தில் முறையான வழியில் இன்டர்ன்ஷிப் அல்லது வேலைவாய்ப்புகளைப் பெறலாம் என்றும், சட்டப்பூர்வமான எதிகல் ஹேக்கிங் முறைகளையே மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் ஐஐடி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT