விரிவுரையாற்றும்போது மேடையில் சரிந்து விழுந்த ஐஐடி கான்பூர் பேராசிரியர் பலி
கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு 53 வயது பேராசிரியர் உயிரிழந்தார். மாணவர் விவகாரங்களின் டீன் மற்றும் இயந்திர பொறியியல் துறையின் தலைவரான சமீர் காண்டேகர், வெள்ளிக்கிழமை உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மேடையில் சரிந்து விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காண்டேகர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், உயர் கொலஸ்ட்ரால் அளவிற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. "காண்டேகர் சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, அதிகமாக வியர்க்க ஆரம்பித்தார். என்ன நடக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்வதற்குள், அவர் மேடையில் சரிந்தார்" என முன்னாள் ஐஐடி கான்பூர் இயக்குனர் அபய் கரண்டிகர் தெரிவித்தார்.
ஆரோக்கியத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த பேராசிரியர்
காண்டேகர் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான வழிகளைப் பற்றி, முன்னாள் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்களிடம் அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளாக "உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்" என்பதாகும். இந்த வார்த்தைகளை கூறிய உடனே, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மாணவர்கள் அவர், உணர்ச்சிவசப்படுவதாக நினைத்த நிலையில் அவருக்கு அதிகமாக வியர்க்க தொடங்கியது. பின்னர் சில வினாடிகளில் அவர் மேடையிலேயே சரிந்தார். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பிறந்த காண்டேகர், கான்பூரில் ஐஐடியில் பி.டெக் படித்துவிட்டு, ஜெர்மனியில் பிஎச்டி முடித்த பின்னர், 2004 அதே கான்பூர் ஐஐடியில் துணை பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார்.