LOADING...
அமெரிக்காவில் தடம் பதிக்கும் ஐஐடி மும்பை! நியூயார்க்கில் அமையும் முதல் சர்வதேச சப்-கேம்பஸ்
அமெரிக்காவில் தடம் பதிக்கும் ஐஐடி மும்பை

அமெரிக்காவில் தடம் பதிக்கும் ஐஐடி மும்பை! நியூயார்க்கில் அமையும் முதல் சர்வதேச சப்-கேம்பஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 27, 2026
01:28 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மும்பை, அமெரிக்காவில் தனது முதலாவது கல்விசார் கிளை வளாகத்தை அமைப்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஸ்டேட் யூனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் (SUNY) ஓல்ட் வெஸ்ட்பரி பல்கலைக்கழகத்துடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளது. இதற்கான விருப்பக் கடிதத்தில் ஐஐடி மும்பை இயக்குநர் பேராசிரியர் ஷிரீஷ் கெதாரே மற்றும் சன் ஓல்ட் வெஸ்ட்பரி தலைவர் டாக்டர் திமோதி ஈ. சாம்ஸ் ஆகியோர் நியூயார்க்கிற்கான இந்தியத் தூதர் பினாயா பிரதான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) கையெழுத்திட்டுள்ளனர்.

ஆராய்ச்சி படிப்புகள்

புதிய படிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி

நியூயார்க்கின் லாங் ஐலாண்ட் பகுதியில் அமையவுள்ள இந்த ஐஐடி மும்பையின் புதிய கிளை வளாகமானது அறிவியல், பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு செயல்படவுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவுள்ளன. மேலும், இரு நாட்டுப் பேராசிரியர்களின் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் சர்வதேச கல்வி மாநாடுகளை நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

புதிய மைல்கல்

இரு நாட்டு உறவில் ஒரு புதிய மைல்கல்

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் குறித்துக் காணொளி வாயிலாகக் கருத்து தெரிவித்துள்ள இந்திய மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான கல்வித் துறை உறவில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உன்னதமான கூட்டுமுயற்சி இந்தியாவின் ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேலும் வளப்படுத்துவதுடன், உலகளாவிய அரங்கில் இந்திய மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் புதிய மற்றும் மிகப்பெரிய சர்வதேச வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

முக்கிய நோக்கம்

உலகளாவிய தலைவர்களை உருவாக்கும் முக்கிய நோக்கம்

இத்தொடர்பாகப் பேசிய ஐஐடி மும்பை இயக்குநர், தரமான கல்வியை வழங்குவதில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் சன் ஓல்ட் வெஸ்ட்பரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் தங்களுக்குப் பெருமகிழ்ச்சி என்று கூறினார். அதேபோல், சன் ஓல்ட் வெஸ்ட்பரி தலைவர் டாக்டர் திமோதி கூறுகையில், தங்களது வளாகத்தில் ஐஐடியின் பலமான இருப்பு இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் உலகத்தரம் வாய்ந்த கூட்டுப் பயிற்சியை வழங்க உதவும் என்றும், இது எதிர்கால உலகளாவிய தலைவர்களை உருவாக்க அடித்தளமாக அமையும் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

Advertisement