கர்நாடகா தேர்தல் பார்வையாளராக தமிழகத்தின் 11 ஐஏஎஸ் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பாஜக'விற்காக பிரதமர் மோடியும், காங்கிரஸ் கட்சியினருக்காக மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக, மிக முக்கியத்துவமாக பார்க்கப்படும் இந்த தேர்தலினை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தேர்தல் ஆணையம் மூலம் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அதிகாரிகள்
அதன்படி தமிழகத்தினை சேர்ந்த 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் என மொத்தம் 13 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதாவது தமிழக மதுவிலக்குத்துறை எஸ்.பி.வருண்குமார் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு காதி மற்றும் கிராமத்தொழில் வாரியத் தலைவர் சங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கமிஷனர் சம்பத் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மலர்விழி, வீர ராகவராவ், ஷோபனா உள்பட 11ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தை சேர்ந்த இந்த 13 அதிகாரிகளும் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு, அதாவது, வடகர்நாடகா பகுதிக்கு 5பேர், தென் கர்நாடகா பகுதிக்கு 6பேர் என பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். தேர்தல்ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இவர்கள், கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.