ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஜாமீனில் வெளியே வந்த தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் வாளால் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். பலாத்காரம் மற்றும் கொலைக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிர்சா-தேரா தலைவர், ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து 40 நாள் ஜாமீனில் சனிக்கிழமை அன்று வெளியேறினார். அதன்பின், உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தனது பர்னாவா ஆசிரமத்திற்கு வந்த அவர் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடி இருக்கிறார். ஒரு மாபெரும் கேக்கை வைத்து ராம் ரஹீம் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜாமீன் மனுவில், நாளை(ஜன 25) கொண்டாடப்படும் தேரா முன்னாள் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவதாக ராம் ரஹீம் தெரிவித்திருந்தார்.
ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் பங்கேற்பு
சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், "ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்படிக் கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறைந்தது ஐந்து கேக்குகளையாவது வெட்ட வேண்டும்." என்று இவர் கூறியதைக் கேட்க முடிகிறது. ஆயுதங்களை பொதுவில் காட்சிப்படுத்துவது(வாளால் கேக் வெட்டுவது) ஆயுத சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள ஒன்றாகும். ராம்ரஹீம் நேற்று(ஜன 23) தனது பிரிவின் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மெகா தூய்மை பிரச்சாரத்தை மெய்நிகராக தொடங்கி வைத்தார். ஹரியானாவைச் சேர்ந்த சில மூத்த பாஜக தலைவர்கள், ராஜ்யசபா எம்பி கிரிஷன்லால் பன்வார், முன்னாள் அமைச்சர் கிரிஷன்குமார் பேடி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ராம் ரஹீமுக்கு ஜாமீன் வழங்கப்படுவது கடந்த 14 மாதங்களில் இது நான்காவது முறையாகும். கடந்த மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.