"மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு
முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், அக்கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட சிறிது நேரத்தில், மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக எம்பி ஆக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிஜ் பூஷன், மாலிக் உள்ளிட்டவர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதால் தான் 12 ஆண்டுகளாக வகுத்து வந்த பதவியை விட்டு விலகினார். இந்நிலையில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்புக்கு நடைபெற்ற தேர்தலில், 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனிதா ஷியோரன் வெறும் ஏழு வாக்குகளை மட்டுமே பெற்றார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்திய வினேஷ் போகட்
நாட்டின் தலைசிறந்த மல்யுத்த வீரர்களான மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இந்த முடிவுகளுக்கு எதிரான தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். பத்திரிகையாளர்களுடன் பேசும் போது கண்ணீர் விட்ட காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட், "தற்போது சஞ்சய் சிங் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாவர்" என தெரிவித்தார். மேலும் இந்த நாட்டில், "எப்படி நீதி கிடைக்கும் என தெரியவில்லை" என தெரிவித்தவர், "எங்கள் மல்யுத்த வாழ்க்கையின் எதிர்காலம் இருளில் உள்ளது" எனவும் கூறினார்.