"நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி
சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2000 பேருக்கு திமுக சார்பில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன். நான் இஸ்லாமி மதத்தை சேர்ந்தவனும் கூட. நான் டான் பாஸ்கோ பள்ளியில் படித்து லயோலா கல்லூரியில் தான் பட்டம் பெற்றேன். பின், ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணைத் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனவே, அந்த உரிமையில் தான் இன்று இங்கு வந்து பேசுகிறேன்" என்று கூறியுள்ளார்.
"இதை சொன்னால் சிலருக்கு எரியும்!"
சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கும் விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி, மேடையில் உரையாற்றும் போது இவற்றை கூறியுள்ளார். மேலும் அவர், "மாலை அணிந்து கொண்டு அறநிலையத்துறை அமைச்சராக இருந்தாலும், அமைச்சர் சேகர்பாபு 'அல்லேலூயா' என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கிறார். ரம்ஜான் என்றால் பெரிய நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இது தான் உண்மையான சமூக நீதி கட்சி. " என்றும் "இதையெல்லாம் சொன்னால் சிலருக்கு எரியும்!" என்றும் உரையாற்றியுள்ளார்.