LOADING...
திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?
புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது

திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
12:29 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களை இணைக்கும் இந்த ரயில், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த ரயிலின் இருபுறமும் இன்ஜின்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் வேகம் எடுக்கும்போதும், நிறுத்தும்போதும் பயணிகள் 'ஜெர்க்' இல்லாமல் சீராக பயணிக்க முடியும். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ரயில், நீண்ட தூரப் பயண நேரத்தை கணிசமாக குறைக்கிறது.

விவரங்கள்

அம்ரித் பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்

செல்போன் சார்ஜிங் பாயிண்ட்கள், மடிக்கக்கூடிய சிற்றுண்டி மேசைகள், தண்ணீர் பாட்டில் வைக்கும் இடங்கள் மற்றும் இருளிலும் வழிகாட்டும் ரேடியம் தரை விரிப்புகள் போன்ற நவீன வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன. அவசர கால விளக்குகள், பொதுத் தகவல் அறிவிப்பு அமைப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட பெட்டி இணைப்புகள் (Semi-permanent couplers) மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வடக்கில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்: 06308), அன்று இரவு 8.25 மணிக்கு திருப்பூர் வந்தடைகிறது. ஐந்து நிமிட நிறுத்தத்திற்குப் பின் 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு ஹைதராபாத்தைச் சென்றடையும். சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட பயணிகள் இந்தச் சேவையால் பெருமளவில் பயனடைவார்கள்.

Advertisement